Wednesday, 31 August 2016

பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு Online -ல் நடைபெறாது ஏன் ???ஆசிரியர் சங்கங்கள் கொதிப்பு

பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு Online -ல் நடைபெறாது ஏன் ???ஆசிரியர் சங்கங்கள் கொதிப்பு


பள்ளிக்கல்வித் துறையில் கடந்த இரண்டு வாரமாக பதவியுயர்வு மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு இணையவழியாக ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெற்று வந்தது.பட்டதாரி ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர் நிலை-2 ஆகிய பதவிகளுக்கு 03-09-2016 அன்று மாவட்டத்திற்குள்ளும் 04-09-2016 வெளி மாவட்டத்திற்கும் இணையவழி 


ஆன்லைன் கலந்தாய்வு  நடைபெறவிருந்த நிலையில் திடீரென இன்று தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.043248/சி3/இ1/2016 நாள்:31.8.2016 -ல் குறிப்பிட்டுள்ள ஆணையின் படி ரத்து செய்து இணையம் வழி அல்லாது(Manual) ஆக நேரடியாக
கலந்துகொள்ள ஆணையிட்டதின் மர்மம் என்ன என்பது புதிராக உள்ளது.


ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடந்தால் பல ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்தில் காலிப் பணியிடம் இல்லையென்றாலும் கூட அருகாமை மாவட்டங்களில் உள்ள காலிப்பணியிடத்தில் தனக்கு மாறுதலைப் பெற்றுக் கொள்வார்.ஆனால் தற்போது Manual ஆக மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றால் அந்த ஆசிரியர்கள் நேரிடையாக கலந்துகொள்ள வேண்டும்.இதனால் தனது சொந்த மாவட்டத்தில் நடைபெறும் மாறுதல் கலந்தாய்வில் மட்டுமே பங்கேற்க முடியும்.


அங்கு காலிப் பணியிடம் இல்லையென்றால் வேறு வழி இல்லாமல் பழைய இடத்திலேயே பணிபுரிய வேண்டும்.இந்த வருடம் அருகாமை மாவட்டத்திற்காவது மாறுதல் பெற்றுவிடலாம் என்ற கொஞ்ச ஆறுதலான கனவும் பறிபோகும்.  காலிப் பணியிடங்களை மறைத்து பணம் பெற்றுக்கொண்டு மாறுதல் வழங்கத்தான்  இப்படி ஒரு அறிவிப்பு கடைசி நேரத்தில் வந்துள்ளது என ஆசிரியர் சங்கங்கள் கொதிக்கின்றன.

Tuesday, 30 August 2016

பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியை - தொடக்க கல்வி அலுவலகத்தில் தற்கொலை முயற்சி

பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியை - தொடக்க கல்வி அலுவலகத்தில் தற்கொலை முயற்சி


சேலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில், ஆசிரியை, துாக்க மாத்திரை சாப்பிட்டு, மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் டவுனை சேர்ந்தவர் தனலட்சுமி, 42; சேலம், தேர்வீதி அரசு நடுநிலைப் பள்ளியில், இடைநிலை ஆசிரியையாக பணிபுரிந்தார்.


ஆக., 13ம் தேதி, பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், உபரி ஆசிரியர் பணியிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு, பணி நிரவல் நடந்தது. இதில், காடையாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள பள்ளிக்கு, தனலட்சுமி பணி மாறுதல் செய்யப்பட்டார். அங்கு செல்ல விருப்பம் இல்லாததால், தன் பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்ய கோரி வந்தார்.



இந்த நிலையில், நேற்று, சேலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்துக்கு வந்து, தன் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தினார். அதற்கு வாய்ப்பு இல்லை என, அதிகாரிகள் கூறிய நிலையில், அங்கேயே, தர்ணா நடத்த முயன்றார். போலீசார் சமாதானப்படுத்தி, அவரை அனுப்பி வைத்தனர். பின், கழிப்பறை சென்று வந்த அவர், மாடிப்படி அருகில், திடீரென மயங்கி விழுந்தார். அவரை, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதில், பணி மாறுதலை ரத்து செய்யாததால், துாக்க மாத்திரைகள் சாப்பிட்டதாக, தனலட்சுமி தெரிவித்தார். இது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தங்கராஜ் கூறுகையில், ''பணி நிரவல் பட்டியல், ஏற்கனவே அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைத்தோம். அதில் குறைபாடு இருப்பின் தெரிவிக்கலாம் என, சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. 100 சதவீதம், முறையாக பணி நிரவல் நடந்த நிலையில், தற்போது, அதை ரத்து செய்வது சாத்தியமில்லை,'' என்றார்.

Friday, 26 August 2016

அரசு பள்ளியில் புத்தகம் எடுத்து வராததை கண்டித்த ஆசிரியைக்கு மாணவன் ‘பளார்’ : ஆசிரியர்கள் அதிர்ச்சி


புத்தகம் எடுத்து வராததை கண்டித்த ஆசிரியைக்கு  மாணவன் ‘பளார்’ விட்ட சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


திருப்பூரில், பள்ளி மாணவர்கள் 2 கோஷ்டிகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதும், ரோடுகளில் விரட்டி விரட்டி அடித்துக் கொள்வதும் அடிக்கடி நடந்து வருகிறது. இதில் சில மாணவர்கள் பலத்த காயமடைந்த சம்பவங்களும் நடந்துள்ளன. இதுபோன்ற சம்பவங்களில் பெரும்பாலும் அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களே ஈடுபட்டு வருகின்றனர்.


இதற்கு, கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகின்றனர்.   கடந்த 23ம் தேதி, திருப்பூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-2 மாணவர்களுக்கு, ஆசிரியை ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்துள்ளார்.


அப்போது, மாணவன் ஒருவன் புத்தகம் எடுத்து வரவில்லை. இதை அறிந்த ஆசிரியை அந்த மாணவனை கண்டித்ததோடு, அவன் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அந்த மாணவன், ஆசிரியையின் கன்னத்தில் திருப்பி ‘பளார்’, ‘பளார்’ என அறைந்துள்ளான். இதில் ஆசிரியைக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து தலைமை ஆசிரியர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த மாணவனுக்கு மாற்றுச்சான்றிதழ் கொடுத்து பள்ளியை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Wednesday, 24 August 2016

கட்டாய இடமாற்றம்: ஆசிரியர்கள் பதற்றம்.

கட்டாய இடமாற்றம்: ஆசிரியர்கள் பதற்றம்.


ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங், முடிவு கட்டத்தைஎட்டியுள்ளது. வரும், 27ம் தேதி கட்டாய இடமாற்றம் நடக்கிறது; இதில், ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களுக்கு அதிரடியாக மாற்றப்பட உள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு ஒருமுறை விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது.
   கடந்த, 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு கவுன்சிலிங்கில், முக்கிய காலியிடங்கள் மறைக்கப்படாமல், ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். வரும், 27 முதல், 29ம் தேதி வரை, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், பணி நிரவல் எனப்படும், கட்டாய இடமாற்றம் செய்யப்படுகிறது.
அதிக அளவில்... : ஒவ்வொரு பள்ளியிலும், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, இத்தனை ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்ற விகிதாச்சாரம் உள்ளது. அதையும் மீறி, சில மாவட்டங்களில், அதிகளவில் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். அவர்களை கணக்கெடுத்து, ஆசிரியர் பற்றாக்குறை உள்ள மாவட்ட பள்ளிகளுக்கு மாற்றுவதே, பணி நிரவல் கலந்தாய்வு என, கூறப்படுகிறது.அதன்படி, பள்ளிக் கல்வித்துறை எடுத்துள்ள பட்டியலில், 3,000 ஆசிரியர்கள் வரை, சில மாவட்டங்களில், கூடுதலாக பணியாற்றுவது தெரியவந்துள்ளது. எனவே, கூடுதல் ஆசிரியர் இடங்களை, ஆசிரியர் தேவைப்படும் பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு மாற்ற முடிவு செய்துள்ளனர். விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தர்மபுரி போன்ற மாவட்டங்களில், காலியிடங்கள் அதிகமாக உள்ளன. எனவே, தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், வரும், 27ம் தேதி முதல், எந்த மாவட்டத்திற்கும் அதிரடியாக மாற்றப்படலாம்.
எப்படியாவது... : அதேநேரம், பள்ளிக் கல்வித் துறையில் அதிகமாக பணியாற்றும் தென் மாவட்ட ஆசிரியர்கள், எப்படியாவது, சொந்த மாவட்டம் அல்லது அதையொட்டிய பகுதிகளுக்கு செல்ல, அதிகாரிகளை அணுகியுள்ளனர். ஆனால், சிபாரிசு கூடாது என, அரசிடமிருந்து கண்டிப்பானஉத்தரவு உள்ளதால், அதிகாரிகளுக்கு நெருக்கடியான நிலையும், ஆசிரியர்கள் மத்தியில் பதற்றமான சூழலும் ஏற்பட்டுள்ளது.

Saturday, 20 August 2016

பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு: ஒருவருக்கு மட்டும் இடமாறுதல், 61 பேர் ஏமாற்றம்

பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு: ஒருவருக்கு மட்டும் இடமாறுதல், 61 பேர் ஏமாற்றம்


திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுவதற்கான கலந்தாய்வில் ஒருவர் மட்டும் மாறுதல் பெற்றார். மற்ற 61 பேர் ஏமாற்றம் அடைந்தனர்.


தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) இணையதளம் வாயிலாக சனிக்கிழமை நடைபெற்றது.


மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமையில், திருவண்ணாமலை டேனிஸ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் இந்த கலந்தாய்வு நடைபெற்றது. இதில், 62 ஆசிரிய - ஆசிரியைகள் கலந்துகொண்டு வெளி மாவட்டங்களுக்குச் செல்ல காத்திருந்தனர்.


ஆனால், தாங்கள் விரும்பிய மாவட்டத்தில் விரும்பிய ஒன்றியத்தில் தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடம் இல்லாததால் 61 ஆசிரிய - ஆசிரியைகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


ஒருவருக்கு மட்டும் மாறுதல்: 62 பேரில் ஒரே ஒரு ஆங்கில ஆசிரியர் மட்டும் வேலூர் மாவட்டத்துக்கு இடமாறுதல் பெற்றார். இதேபோல, வேலூர் மாவட்டத்தில் இருந்து 2 பட்டதாரி ஆசிரியர்கள் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு இடமாறுதல் பெற்றுள்ளனர்.


இன்று கலந்தாய்வு நிறைவு: இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) ஞாயிற்றுக்கிழமை (ஆக.21) நடைபெறுகிறது. இத்துடன் தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு 2016-17ஆம் ஆண்டுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நிறைவு பெறுகிறது.

Thursday, 18 August 2016

தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்


சுதந்திர தினத்தன்று மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்காமல் காலதாமதமாக வந்து தேசியக் கொடி ஏற்றியதாக, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்துள்ள துரிஞ்சிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வளர்மதி என்பவர் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். சுதந்திர தினத்தன்று பள்ளிக்குதாமதமாக வந்த வளர்மதி, மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் தகவல் தெரிக்காமல் தேசியக்கொடியை ஏற்ற முயற்சித்தார். இதையறிந்த ஊர் பொதுமக்கள் தேசியக் கொடியை ஏற்றவிடாமல் அவரைத் தடுத்து நிறுத்தி, இதுகுறித்து கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சந்திரிகாவுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, துரிஞ்சிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு வந்த கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரனிடம் அறிக்கை அளிக்கப்பட்டது. அதன்பேரில், தலைமை ஆசிரியை வளர்மதியை பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்

இடம் பிடித்த மாணவிகள்: 3.21 லட்சம் பேர் தகுதி பெறவில்லை

மருத்துவ நுழைவுத் தேர்வு தரவரிசைப் பட்டியலில் மாணவர்களை விட அதிக அளவில் இடம் பிடித்த மாணவிகள்: 3.21 லட்சம் பேர் தகுதி பெறவில்லை


தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 15 சதவீதம் இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மூலம் நிரப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) கடந்த மே மாதம் 1-ம் தேதி முதல் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வையும், கடந்த ஜூலை 24-ம் தேதி இரண்டாம் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வையும் நடத்தியது. இந்த 2 கட்ட தேர்வு முடிவுகளையும் சிபிஎஸ்இ நேற்று முன்தினம் வெளியிட்டது.


மாணவிகள் சாதனை


இது தொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:இரு கட்டங்களாக நடந்த தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு 8,02,594 பேர் விண்ணப்பித்திருந்தனர். 7,31,223 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 71,371 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு எழுதியவர்களில் 1,83,424 மாணவர்கள், 2,26,049 மாணவிகள், 4 திருநங்கைகள் என மொத்தம் 4,09,477 பேர் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்து கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். 3,21,746 பேர் தகுதி பெறவில்லை.அடுத்த வாரம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு www.mcc.nic.in இணையதளம் மூலமாக ஆன்லைனில் கலந்தாய்வு தொடங்குகிறது. இந்த கலந்தாய்வுக்கு 11,058 மாணவர்கள், 8,266 மாணவிகள், 1 திருநங்கை என மொத்தம் 19,325 பேர் தகுதி பெற்றுள்ளனர். இரு கட்டங்களாக நடந்த தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் மாணவர்களை விட கூடுதலாக 4,265 மாணவிகள் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளனர். தேர்வின்போது விதிமுறைகளை மீறிய 26 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுத நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


3.5 லட்சம் மாணவர்கள் பாதிப்பு


தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு பற்றி சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறும்போது, “இந்ததேர்வில் 4,09,477 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். ஆனால் நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சுமார் 52 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்களில் 35 ஆயிரம் இடங்கள் மற்றும் 22 ஆயிரம் பிடிஎஸ் இடங்களில் 16 ஆயிரம் இடங்கள் மட்டுமே நுழைவுத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் மூலமாக நிரப்பப்பட உள்ளன. மீதமுள்ள 3.5 லட்சம் மாணவர்களால் மருத்துவப் படிப்பில் சேர முடியாது. மருத்துவ நுழைவுத் தேர்வால் தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக மாணவர்கள் பெரும்பாலானோர் நுழைவுத் தேர்வில் தகுதி பெறவில்லை” என்றார்.


விழிப்புணர்வு வேண்டும்:


மருத்துவ நுழைவுத் தேர்வு பற்றி சீமான் ஸ்கூல் ஆஃப் மெடிக்கல் என்ட்ரன்ஸ் நிறுவனர் சீமான் கூறும்போது, “மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கட்டாயம் வேண்டும். அதே நேரத்தில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையை கொண்டுவர வேண்டும். தற்போது நடந்த நுழைவுத் தேர்வு சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் நடத்தப்பட்டது. தமிழக மாணவர்களால் நுழைவுத் தேர்வை எழுதமுடியவில்லை. நம்முடைய மாநில பாடத் திட்டத்தில் இருந்து3 மதிப்பெண்களுக்கு மட்டுமே கேள்விகள் இருந்தன. மற்ற அனைத்து கேள்விகளும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டிருந்தன.ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பாடத் திட்டம் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை ஒட்டியே உள்ளன. அதனால் அந்த மாணவர்கள் எளிதாக நுழைவுத் தேர்வை எழுதினர். சிபிஎஸ்இ பாட திட்டத்தில் படித்த மாணவர்கள் மட்டுமே நுழைவுத் தேர்வில் தேர்வாகி உள்ளனர். தமிழகத்தில் நுழைவுத் தேர்வு குறித்து ஆசிரியர்களுக்குமுதலில் பயிற்சி அளிக்க வேண்டும். அதன்பின் நுழைவுத் தேர்வு குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் முறையாக பயிற்சி எடுக்க வேண்டும். அப்போதுதான் தேர்வில் வெற்றி பெற முடியும். மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி மையங்களையும் அதிகரிக்க வேண்டும். மருத்துவக் கல்லூரிகளையும் அதிகரிக்க வேண்டும்” என்றார்.
 

பள்ளி மாணவர்களுக்கு எரிசக்தி சேமிப்பு : விழிப்புணர்வு ஓவிய போட்டி நடத்த உத்தரவு

பள்ளி மாணவர்களுக்கு எரிசக்தி சேமிப்பு : விழிப்புணர்வு ஓவிய போட்டி நடத்த உத்தரவு


பள்ளி மாணவர்களுக்கு, எரிசக்தி சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஓவியப்போட்டி நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் சார்பில் தேசிய அளவில் எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன.மாவட்ட வாரியாக 4,5,6 மற்றும் 7,8, 9ம் வகுப்பு மாணவர்களை ஏ, பி என இரு பிரிவுகளாக பிரித்து போட்டிகளைநடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தர விட்டுள்ளது. பள்ளி அளவில் சிறந்ததாக தேர்வு செய்யப்படும் இரு படைப்புகளை, சென்னையில் உள்ள எரிசக்தி துறை அதிகாரிகளுக்கு, செப்., 30க்குள் கிடைக்கும்படி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேனி முதன்மை கல்வி அலுவலர் வாசு கூறுகையில், “பள்ளி அளவில் தேர்வு செய்யப்படும் சிறந்த இரண்டு படைப்புகள் தலைமை ஆசிரியர்கள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இதில் தேர்வாகும் மாணவர்கள் மாநில போட்டிகளிலும், அதனை தொடர்ந்து தேசிய போட்டிகளிலும் பங்கேற்க உள்ளனர். மாநில போட்டிகளில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும், இரண்டாமிடத்திற்கு 15 ஆயிரம் ரூபாயும், மூன்றாமிடத்திற்கு 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படவுள்ளன. ஆறுதல் பரிசாக 10 பேருக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. தேசிய அளவில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும், ”என்றார்.

Wednesday, 17 August 2016

வேலையில்லா பட்டதாரிகள் , ஆசிரியர்கள்18 லட்சம் பேர்! தமிழக அரசு விழிக்க வேண்டிய நேரமிது


தமிழகத்தில் கலை, அறிவியல் பட்டம் பெற்ற, 14 லட்சம் பேர் வேலை இல்லாமல் உள்ளனர்; அதேபோல், நான்கு லட்சம் பட்டதாரி ஆசிரியர்களும் வேலைக்காக காத்திருக்கின்றனர்.


ஒரு பக்கத்தில், தொழில்களின் எண்ணிக்கை பெருகும் அளவுக்கு, மறு பக்கத்தில், வேலை யில்லாத பட்டதாரிகளின் எண்ணிக்கையும் பெருகி வருவதால், தமிழக அரசு உடனடியாக விழித்துக் கொள்ள வேண்டிய நேரமிது என, கல்வியாளர்கள் கருதுகின்றனர்.


வேலைவாய்ப்பு இல்லாதவர்களில், பட்டதாரி களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிக ரித்து வருகிறது. அரசுத் துறை பணிகள், தனி யாருக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கு வதால், வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன. கடந்த, 2015 ஜூன் நிலவரப்படி,வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 83 லட்சத்து, 35 ஆயிரம் பேர் வேலையின்றி காத்திருந்தனர். இந்த ஆண்டு, ஜூன், 30 நிலவரப்படி, 83.33 லட்சம் பேர், அரசு மற்றும் தனியார் வேலைக் காக, பதிவு செய்து காத்திருப்பதாக, வேலை வாய்ப்பு அலுவலக புள்ளி விபரங்கள் தெரிவிக் கின்றன.


இவர்களில், பி.ஏ., போன்ற கலை பட்ட படிப் பில், 4.50 லட்சம்பேர்; அறிவியலில், 6.14 லட்சம்; வணிகவியலில், 3.40 லட்சம் பேர், என, 14 லட்சம் பட்டதாரிகள் வேலைவாய்ப்பை எதிர் பார்த்துள்ளனர். பள்ளிகளில், பட்டதாரி ஆசிரி யராக பணிபுரிய, 3.82 லட்சம் பேர் காத்திருக் கின்றனர். மேலும், டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், 2.15 லட்சம் பேரும் வேலை தேடுகின்றனர்.


வேலை இல்லாதவர்கள் பட்டியலில், வேளாண்மை பட்டதாரிகள் மிகக்குறைவாக, 641 மட்டுமே உள்ளனர். கல்லுாரி பேராசிரியர் பணியை எதிர்பார்த்து, 2.69 லட்சம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருப்பதாகவும், அந்த புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொழில் நிறுவனங்களும், கல்வி நிறுவனங் களும், தமிழகத்தில்அதிகரித்து வரும் நிலையில்,வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கையும் அதே அளவுக்கு உயர்ந்து வருவது, கல்வி யாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த எண்ணிக்கையை குறைக்க, தமிழக அரசு இப்போதே விழித்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர், கே.பி.ஓ.சுரேஷ் கூறியதாவது:அரசுத் துறைகள் மற்றும் பள்ளி, கல்லுாரிகளில் பதவி உயர்வு, பணி ஓய்வு மற்றும் இறப்பால் ஏற்படும் காலியிடங்களை, உடனடியாக அரசு நிரப்ப வேண்டும். நீண்ட நாட்களாக காலியாக உள்ள இடங்களில், பட்டதாரிகள், ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.


தனியார் மெட்ரிக் பள்ளிகள், கல்லுாரிகள் போன்றவற்றில், தகுதியானவர்களை பதிவு மூப்பு மற்றும் கல்வித் தகுதியின் படி, பணி நியமனம் செய்ய வேண்டும். தொழில் நிறுவனங்களில், தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், அரசே பணி அமர்த்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் பணிக்கான விண்ணப்பங்கள் விநியோகம்.




தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. அவற்றை பூர்த்தி செய்து பிடிஓக்களிடம் சமர்ப்பிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
   தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிகளில் வழக்கம்போல் அரசு பள்ளி ஆசிரியர்கள் அமர்த்தப்பட உள்ளனர். அவர்கள் தேர்தல் பணியில் பங்கேற்க வசதியாக முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து அந்தந்த பள்ளிகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு உள்ளது. அவற்றை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் பெற்று பூர்த்தி செய்து தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.அவற்றை தலைமையாசிரியர் சரிபார்த்து ஆசிரியர் பெயர், வசிக்கும் இடம் உள்ளிட்ட பிற விவரங்களை இணைத்து அந்தந்தபிடிஓ அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் அனுப்பும் பணி தற்போது தொடங்கியுள்ளது. மேலும் விவரங்களை முதன்மை கல்வி அலுவலக வெப்சைட்டில் பார்க்கலாம்.

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் பணிக்கான விண்ணப்பங்கள் விநியோகம்.

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் பணிக்கான விண்ணப்பங்கள் விநியோகம்.


தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. அவற்றை பூர்த்தி செய்து பிடிஓக்களிடம் சமர்ப்பிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
   தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிகளில் வழக்கம்போல் அரசு பள்ளி ஆசிரியர்கள் அமர்த்தப்பட உள்ளனர். அவர்கள் தேர்தல் பணியில் பங்கேற்க வசதியாக முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து அந்தந்த பள்ளிகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு உள்ளது. அவற்றை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் பெற்று பூர்த்தி செய்து தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.அவற்றை தலைமையாசிரியர் சரிபார்த்து ஆசிரியர் பெயர், வசிக்கும் இடம் உள்ளிட்ட பிற விவரங்களை இணைத்து அந்தந்தபிடிஓ அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் அனுப்பும் பணி தற்போது தொடங்கியுள்ளது. மேலும் விவரங்களை முதன்மை கல்வி அலுவலக வெப்சைட்டில் பார்க்கலாம்.

Tuesday, 16 August 2016

இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலி இல்லாத மாவட்டங்கள் !

இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலி இல்லாத மாவட்டங்கள் !


*மதுரை மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் இல்லை


*விருதுநகர் மாவட்டம், இடைநிலைஆசிரியர் காலிப் பணிஇடம இல்லை


*திருநெல்வேலி இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் இல்லை.


*தேனி மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லை


*கோவை மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லை

Monday, 15 August 2016

உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 'கிரெடிட் கார்டு'பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் அடுத்த அதிரடி.

உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 'கிரெடிட் கார்டு'பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் அடுத்த அதிரடி.


பீஹார் மாநிலத்தில் அடுத்தடுத்து அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்டு வரும், முதல்வர் நிதிஷ் குமார்,உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான, 'கிரெடிட் கார்டு' வழங்கும் திட்டத்தை நேற்று அறிவித்தார்.பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணி ஆட்சி நடக்கிறது.
சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, ஐந்து ஆண்டுகளுக்கான தொலைநோக்கு ஆவணத்தை, நிதிஷ் குமார் வெளியிட்டார்.'பூரண மது விலக்கு, அரசு வேலையில், 35 சதவீதம் மகளிருக்குஒதுக்கீடு' என, பல வாக்குறுதிகளை அவர், அப்போது தெரிவித்தார். அதன்படி, ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, அதிரடி திட்டங்களை அவர் அறிவித்து வருகிறார். முதல் கட்டமாக, ஏப்ரலில், பூரண மது விலக்கு அமல்படுத்தப்பட்டது; எனினும், அரசியல்வாதிகள் உட்பட பலர், மது குடித்து கையும் களவுமாக பிடிபட்டனர்.
சட்ட திருத்தம்
 இதையடுத்து, மது விலக்கை கடுமையாக அமல்படுத்தும் விதமாக,சட்ட திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறார்.அதன்படி, ஒருவரது வீட்டில் மதுபாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த வீட்டில் உள்ள, 18 வயது நிரம்பிய அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேலும் ஒரு அசத்தல் அறிவிப்பை, நேற்று அவர்அறிவித்தார். சுதந்திர தினமான நேற்று, பாட்னாவில் தேசியக்கொடியை ஏற்றி, அவர் பேசியதாவது:பீஹாரில் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே என் விருப்பம்; இதற்காக, பீஹார் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 'ஐந்தாண்டுகளுக்குள்பீஹார் முழுமையான வளர்ச்சி அடையும் வகையில், பல திட்டங்களை செயல்படுத்துவேன்' என, தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்தேன். அதன்படி, திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன.பள்ளிக் கல்வியை முடித்து விட்டு, உயர் கல்வி சேர விரும்பும் மாணவர்களின் நலனுக்காக, 'கிரெடிட் கார்டு' வழங்கப்படும். இதன் மூலம், நான்கு லட்சம் ரூபாய், வட்டியில்லா கடனாக மாணவர்களுக்கு கிடைக்கும். இந்த திட்டம், அக்டோபர், 2 முதல் அமலுக்கு வரும்.இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி, மாணவர்கள், தாங்கள் விரும்பும் படிப்புகளில் சேரலாம். ஏழை, எளிய மாணவர்கள் உயர் கல்வி படிப்பதற்கு, கல்விக் கட்டணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சமூக வலைதளங்கள்
 சமூக வலைதளங்கள் மூலம், வதந்திகளையும், அவதுாறுகளையும் கிளப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது, அதை, கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.மாணவர்களுக்கான கடன் திட்டத்தை, நிதிஷ் குமார் அறிவித்தாலும், இந்த திட்டம் எப்படி நடைமுறைப் படுத்தப்படும், மாணவர்கள், எப்போது, கடனை திரும்ப செலுத்த வேண்டும் என்பது பற்றிய விபரங்கள், இன்னும் இறுதி செய்யப்படவில்லை.அறிவிப்பு மழை
● உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு,வட்டியில்லாமல், நான்கு லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும்
● 20 வயது முதல், 25 வயது வரை உடைய இளைஞர்கள் வேலை தேடுவதற்கு வசதியாக, மாதந்தோறும், 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்
● இளைஞர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க, பீஹார் முழுவதும், 534 இடங்களில் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும்
● இளம் தொழில் முனைவோர்க்கு நிதி உதவி வழங்க, 5,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
● அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லுாரிகளில், 2017 முதல் இலவச, 'வைபை' வசதி வழங்கப்படும்.

மாணவியை அடித்த ஆசிரியர் கைது

மாணவியை அடித்த ஆசிரியர் கைது


உத்தமபாளையம் அருகே பள்ளி மாணவியை அடித்த ஆசிரியரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.


 பண்ணைப்புரம் அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை சமூக அறிவியல் பாட ஆசிரியர் ஜீவரட்சகர் (32) தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதாகக் கூறி அடித்தாராம்.
இதில் அந்த மாணவிக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவி, கோம்பை போலீஸில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து, ஆசிரியர் ஜீவரட்சகரை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

Sunday, 14 August 2016

B.ED பயிற்சிக்கு பள்ளிகளில் அனுமதி

பி.எட்., பயிற்சிக்கு பள்ளிகளில் அனுமதி


அரசு பள்ளி ஆசிரியர்கள், தாங்கள் பணிபுரியும் பள்ளிகளில், பி.எட்., பயிற்சி பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், தொலை நிலையில், ஆசிரியர் கல்வியியல் படிப்பான, பி.எட்., முடித்த பின், பயிற்சி மேற்கொள்ள விரும்பினால், தாங்கள் பணியாற்றும் பள்ளியிலேயே, ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தி, பயிற்சி மேற்கொள்ளலாம்.


அதேநேரம், ஐந்தாம் வகுப்பு வரை, பாடம் எடுக்கும் தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், பல்கலை அனுமதிக்கும் பள்ளியில் பயிற்சி பெறலாம்.



'இந்த பயிற்சிக் காலம், பணிக் காலமாக எடுத்துக் கொள்ளப்படாது; எனவே, பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள், விடுப்பு விண்ணப்பம் அளிக்க வேண்டும்' என, தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

57 ஆயிரம் மாணவர்கள் 5-ம் வகுப்புடன் கைவிரிப்பு

57 ஆயிரம் மாணவர்கள் 5-ம் வகுப்புடன் கைவிரிப்பு


தமிழகத்தில் 57 ஆயிரம் மாணவர்கள் 5-ம்வகுப்புக்கு பின் பள்ளிப்படிப்பை கைவிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.நாடு முழுவதும் 14 வயது வரை உள்ள அனைத்து மாணவர்களுக்குமு் கட்டாய கல்வி சட்டம் மூலம் 8-ம்வ குப்பு வரை கல்வி வழங்க மத்திய அரசு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.


அதே போல் 10-ம் வகுப்பு வரை படிக்க அனைவருக்கும் இடை நிலை கல்வி இயக்ககம் என்ற ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனாலும் நாடு முழுவதும் 6 முதல் 12 வயதிற்குட்பட்டோரில் 61 லட்சம் பேர் பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்டது தெரிய வந்துள்ளது. இதற்கான அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.இதில் 26.65 லட்சம் பேர், 11 வயது முதல் 13 வயதுக்கு உட்பட்டோர்.


கடந்த 2014ம் ஆண்டு மத்திய அரசு எடுத்த கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் 11 வயது முதல் 13 வயதுக்கு உட்பட்ட 57 ஆயிரத்து 229 பேர் 5-ம் வகுப்பிற்கு பின், பள்ளி படிப்பை கைவிட்டுள்ளனர்
 

01.01.2006 - 31.12.2010க்குள் பதவி உயர்வு பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கான பாதிப்புகள்.

01.01.2006 - 31.12.2010க்குள் பதவி உயர்வு பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கான பாதிப்புகள்.


ஊதியக்குழு அரசாணை எண்:234ன் படி மிகக்குறைந்த ஊதிய ஏற்றம் 5200-20200 +.2800 நிர்ணயம் செய்யப்பட்டுஊதியம் பெற்று வரும் இடைநிலை ஆசிரியர்களில் 01.01.2006 முதல் 31.12.2010க்குள் பதவி உயர்வு பெற்றுள்ளஇடைநிலை ஆசிரியர்கள் கவனிக்க வேண்டியவை.
   அரசாணை எண் :23ன் படி இடைநிலை ஆசிரியர்களுக்கு 750 ரூபாய் தனி ஊதியமாக 01.01.2011 முதல் வழங்கப்படுகிறது.01.01.2006 முதல் 31.12.2010 க்குள் பதவி உயர்வு பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை + தர ஊதியத்திலிருந்து பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயம் செய்யப்படும்.01.01.2011லிருந்து பதவி உயர்வு பெறுபவர்களுக்கு அடிப்படை + தர + தனி ஊதியத்திலிருந்து பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயம் செய்யப்படும்.
எனவே 01.01.2006 - 31.12.2010க்குள் பதவி உயர்வு பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் தங்களது ஊதியத்தில் தனி ஊதியம் 750 மற்றும் அதற்கான அகவிலைப்படி சேர்த்து ஒரு வருடத்திற்கு தோராயமாக 15000 ரூபாய் இழந்து வருகிறார்கள்.ஒன்றியத்திற்கு வருடத்திற்கு சுமார் 10 பேர் பதவி உயர்வு பெற்றிருப்பார்கள்.
தமிழ்நாட்டில் உள்ளது 365 ஒன்றியங்கள்.2006-2010 வரை உள்ள 5 ஆண்டுகளில் சுமார் 18650 பேர் பாதிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள்.
இதன் பாதிப்பு அறிந்ததும் அறியாமலும் பணியாற்றுபவர்கள் ஒன்றிணைந்து முயற்சி செய்ய வேண்டும்.

Thursday, 11 August 2016

ஆசிரியைகள் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு: 2-ஆவது நாளாக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்




வந்தவாசி அருகே பள்ளித் தலைமை ஆசிரியை மற்றும் ஒரு ஆசிரியை திடீர் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, பள்ளியில் பயிலும் ஒரு பிரிவு மாணவர்கள் 2-ஆவது நாளாக புதன்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


வந்தவாசியை அடுத்த உளுந்தை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளித் தலைமை ஆசிரியை அ.முனியம்மாள், ஆசிரியை வ.வளர்மதி ஆகியோர் மீது பள்ளியின் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஒருவர் கல்வித் துறைக்கு புகார் மனு அனுப்பிய நிலையில், இது தொடர்பாக கல்வித் துறை விசாரணை மேற்கொண்டது.


இதைத் தொடர்ந்து, பள்ளித் தலைமை ஆசிரியை அ.முனியம்மாள், கொவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கும், ஆசிரியை வ.வளர்மதி, மணிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கும் நிர்வாக மாறுதல் செய்து கல்வித் துறை உத்திரவிட்டது.


மேலும், கொவளை பள்ளித் தலைமை ஆசிரியை மரகதம், உளுந்தை பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.


இந்நிலையில், அ.முனியம்மாள், வ.வளர்மதி ஆகியோர் திடீர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து, உளுந்தை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் ஒரு பிரிவைச் சேர்ந்த சுமார் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளை புறக்கணித்து பள்ளியின் முன் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மாணவர்களுடன் அவர்களின் பெற்றோர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். அதிகாரிகள் சமரசம் செய்ய முயன்றும் சமாதானத்தை ஏற்காத மாணவர்கள் போராட்டத்தை தொடர்வோம் என்று கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றனர்.


இந்நிலையில், 2-ஆவது நாளாக புதன்கிழமையும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தை தொடர்ந்தனர். அந்தக் கிராம காலனி நுழைவுப் பகுதியில் தரையில் அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதையடுத்து, வந்தவாசி வட்டாட்சியர் எஸ்.முருகன் உள்ளிட்ட அதிகாரிகள், மாணவர்களிடமும், பெற்றோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.


இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு புதன்கிழமை பிற்பகல் வகுப்புகளுக்குச் சென்றனர்.

தமிழில் கையெழுத்திட உத்தரவு.

ஆசிரியர்கள் தமிழில் கையெழுத்திட உத்தரவு.


ஆசிரியர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும், என தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் முதல்எழுத்து உள்பட தங்களின் பெயரை தமிழில் கையெழுத்திட வேண்டும்.
   ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.ஆனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இதனை சரிவர பின்பற்றுவதில்லை என்ற புகார்கள் வந்துள்ளது. எனவே, அனைத்து ஆசிரியர்களும், அலுவலர்களும் முதல் எழுத்துடன் பெயரை தமிழில் கையெழுத்திட வேண்டும். இதனைமாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tuesday, 9 August 2016

பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கைகள் - பள்ளிக்கல்விதுறை அறிவிப்புகள்.

சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கைகள் - பள்ளிக்கல்விதுறை அறிவிப்புகள்.


* தொலைதூரம் மற்றும் மலை பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு பள்ளிக்கு சுலுபமாக சென்றுவர 12.58 கோடி செலவில் போக்குவரத்து மற்றும் வழிகாவலர் வசதிகள் செயல்படுத்தபடும்
* இடைநின்ற மற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 21 கோடி ரூபாய் செலவில் கல்வி அளிக்கபடும், இத்திட்டதின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 20 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்து உள்ளார்கள்
* நடப்பு கல்வியாண்டில் 132353 மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ளடிக்கிய கல்வி ம்றறும் உதவி உபகரணங்கள் 32.18 கோடி வாங்கப்படும்
   * கல்வியில் பின்தங்கிய 44 ஒன்றியங்களில் உள்ள குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக கணினி மற்றும் சார்ந்த உபகரணங்கள் 4 கோடி செலவில் வாங்கப்படும்
* தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தினால் பல்வேறு தலைப்புகளில் வெளியிட்ட சுமார் 1000 நூல்கள் தமிழ்இணைய கல்வி கழகத்துடன் இணைந்து 5 கோடி செலவில் மின்மியமாக்கி இணையதளத்தில் பணிவேற்றபடும்
* மாணவர்கள் பாடங்களை பொருள் உணர்ந்து படிப்பதற்கு வசதியாக மல்டிமீடியா அனுபவத்தை தரகூடிய வகையில் பாடநூல்கள் 9 லட்சம் செலவில் மாற்றியமைக்கபடும்
* தமிழ்நாட்டில் பொது நூலகங்கள் சேவையினை மேம்படுத்தவாசகர்கள் பயன்பாட்டிற்காக 93 பகுதி நூலகங்கள் ஊர்ப்புற நூலகங்களாக 2.32கோடி செலவில் மேம்படுத்த படும்
* மாணவர்களின் ஆங்கில மொழி திறன் மேம்பட மூன்றாவது முதல் எட்டாம் வகுப்பு வரை ஆங்கில பாடம் புத்தகங்களுடன் மொழி திறனை வளர்க்க இலக்கண பயிற்ச்சிதாள்கள் வழங்கப்படும்
* தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் மைய நூலகங்களில் சூரிய ஒளியை பயண்படுத்தி மின்சாரம் வழங்கிட 64 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.

இவை உட்பட மொத்தம் 22 அறிவிப்புகள

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 796 பேருக்கு பணியிட மாறுதல்




தொடக்கக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற கலந்தாய்வில் 796 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெற்றனர். ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசுத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


இதில், 796 தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெற்றனர். 562 இடைநிலை ஆசிரியர்கள் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Monday, 8 August 2016

பி.வோக்., படிப்பு விரைவில் அறிமுகம்

பி.வோக்., படிப்பு விரைவில் அறிமுகம்


பி.வோக்., எனப்படும், தொழிற்கல்வி பட்டப் படிப்பை துவங்க, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கு, யு.ஜி.சி., அனுப்பிய சுற்றறிக்கையில், 'பல்கலை மற்றும் கல்லுாரிகள், பி.வோக்., எனப்படும் தொழிற்கல்வி பட்டப்படிப்பு துவங்க வேண்டும்.


இந்த படிப்புகளுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என, மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது

பள்ளிகளுக்கு உளவியல் ஆலோசகர்கள்




அரசு பள்ளிகளில் மாணவர்களை நல்வழிப்படுத்த, ஒன்பது உளவியல்ஆலோசகர்களை, அரசு நியமித்துள்ளது.மது அருந்துதல், மாணவியரை கிண்டல் செய்தல், பஸ்களில் கோஷ்டி மோதலில் ஈடுபடுதல் போன்ற, அரசு பள்ளி மாணவர்களின் தவறான பழக்கங்கள், சமீபகாலமாக அதிகரித்துள்ளன.
   இதை தவிர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும்,அரசு பள்ளிகளுக்கு சென்று, மாணவர்களை நல்வழிப்படுத்த, ஒன்பதுஉளவியல் ஆலோசகர்களை, பள்ளிக்கல்வித் துறை நியமித்துள்ளது. மாவட்ட கல்விஅதிகாரிகள், தங்கள்கட்டுப்பாட்டில் உள்ளபள்ளிகளில், இந்த உளவியல் ஆலோசகர்கள் மூலம் மாணவர்களை நல்வழிப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

Sunday, 7 August 2016

அண்ணாமலை பல்கலை பேராசிரியர்கள் 300 பேர் அரசு கல்லூரிகளுக்கு மாற்றம்:

அண்ணாமலை பல்கலை பேராசிரியர்கள் 300 பேர் அரசு கல்லூரிகளுக்கு மாற்றம்: உயர்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை

அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் 300 பேர் அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு 3 வருட ஒப்பந்த அடிப்படையில் மாற்றப்பட உள்ளனர். தமிழகத்தில் உள்ள 87 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் உள்ளது. புதிதாக தோற்றுவித்த கல்லூரிகள் மற்றும் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்த கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் பற்றாக்குறை உள்ளது.
இந்நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக நியமிக்கப்பட்ட விரிவுரையாளர்கள் மற்றும் உதவி பேராசிரியர்களை தேவைப்படும் அரசு கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்ய உயர்கல்வித்துறை முடிவு செய்தது.இதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 369 விரிவிரையாளர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மேலும் 300 விரிவுரையாளர்கள் மற்றும் உதவி பேராசிரியர்களை 3 வருட ஒப்பந்த அடிப்படையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து கல்லூரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்கள் கூறுகையில், ''அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கூடுதலாக உள்ள பேராசிரியர்களை பல்கலைக்கழகங்கள் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் நியமிக்கலாம். இதன் மூலம் அங்கு ஏற்கனவே பணியாற்றும் கரவுவ விரிவுரையாளர்களுக்கு பணியில் பாதிப்பு ஏற்படக்கூடாது. இதனை கருத்தில் கொண்டு தகுதியுள்ளவர்களை நியமிக்க உயர்கல்வித்துறை முன்வரவேண்டும்'' என்றனர்

தமிழ் எழுத்துக்களுக்கு இணையாக 'சைகை' முறை கண்டுபிடிப்பு : எளிதாக கற்பிக்க ஏற்பாடு




தொடக்க பள்ளிகளில் மாணவர்கள் தமிழ் எழுத்துக்களை எளிய முறையில் உச்சரிக்கவும், பிழையின்றி எழுதுவதற்கும் 30 வகையான புதிய 'சைகை' முறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான 'சிடி'க்கள் தொகுப்பை மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) தயாரித்துள்ளது.




தமிழில் பேசுவதற்கும், எழுதுவதற்கும் 'மயங்கொலிகள்' எனப்படும் 'ல, ள, ழ, ர, ற, ந, ண, ன' ஆகிய எட்டு எழுத்துக்கள் அதிகம் பயன்படுகின்றன.ஆனால் பேச்சு வழக்கில் இந்த எழுத்துக்களின் தன்மை குறைந்து உச்சரிப்பு மருவி விடுகிறது. இதன் காரணமாக தமிழ் எழுத்துக்களை உரிய ஓசை, ஏற்ற இறக்கத்துடன் உச்சரிக்க, எழுத மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.


சைகை முறை: இதை தவிர்க்கவும், தமிழ் எழுத்துக்களை உரிய வடிவில் எழுதுவதற்கும், 30 நாட்களில் சரியான உச்சரிப்புடன் பேசவும், பிழையின்றி எழுதும் வகையில் அரசுப் பள்ளி ஆசிரியர்களால் அனைத்து உயிரெழுத்து மற்றும் மெய் எழுத்துக்களுக்கு உரிய 'சைகை' முறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.இப்பணியில் எஸ்.சி.இ.ஆர்.டி., யின் மொழிப்புல (லாங்குவேஜ்செல்) ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். 1 - 5 வகுப்பு வரை உள்ள தமிழ் பாடநுாலின் அனைத்து பாடங்களையும் 'தாயெனப்படுவது தமிழ்' என்ற தலைப் பில் சி.டி., தொகுப்பை ஆக.,2ல் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். இவ்வாரத்தில் பள்ளிகளுக்கு 'சிடி'க்கள் வழங்கப்பட உள்ளன.


தொழில்நுட்ப இயக்குனர் அமலம் ஜெரோம் கூறியதாவது:எஸ்.சி.இ.ஆர்.டி., உதவியுடன் காது கேளாத, வாய் பேசாத மாணவர்களுக்கு கற்பித்தல், பரத நாட்டியத்தின் முத்திரைகள், உளவியல் மற்றும் உடல் மொழி ரீதியிலான 'சைகைகளை' அடிப்படையாக கொண்டு சரியான உச்சரிப்புடன் எழுத்துக்களை எளிதில் புரிய வைத்து பிழையின்றி எழுதுவதற்கு 'சைகைகளை' உருவாக்கி உள்ளோம். எழுத்துக்களை மிக துல்லியமாக புரிந்துகொள்ள பின்னணி காட்சிகள், நவீன தொழில் நுட்ப உத்திகளுடன் 'சிடி' க்கள் தயாரிக்கப்பட்டுள்ளன, என்றார்.

Thursday, 4 August 2016

தலைமை ஆசிரியர்கள் 86 பேருக்கு பதவி உயர்வு




சென்னை: அரசு நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், 86 பேருக்கு, உதவி தொடக்க கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் முதல் நாளில், 257 உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் மாறுதல் பெற்றனர். இரண்டாம் நாளான நேற்று, தலைமை ஆசிரியர்களுக்கு, உதவி தொடக்க கல்வி அதிகாரிகளாக இடமாற்றம் அளிக்கும் கலந்தாய்வு நடந்தது.
இதற்கு, 168 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், 86 பேருக்கு மட்டும் விருப்பமான இடங்கள் கிடைத்தன. மீதமுள்ள, 82 பேர் தலைமை ஆசிரியர்களாகவே பணியை தொடர விருப்பம் தெரிவித்தனர். அவர்களுக்கு இன்னும், மூன்று ஆண்டுகளுக்கு பதவி உயர்வுக்கு வாய்ப்பில்லை. ஆனால், உதவி தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு இணையான ஊதியம், சலுகை பெறுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

'வாட்ஸ் ஆப்' விவகாரம் : நடவடிக்கை நிறுத்தம்

'வாட்ஸ் ஆப்' விவகாரம் : நடவடிக்கை நிறுத்தம்


'வாட்ஸ் ஆப்' பயன்படுத்திய ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பிய விவகாரத்தில், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில், 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளத்தில் விவாதம் நடத்தியதற்காக, நான்கு ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியான சி.இ.ஓ., நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் கேட்டார்.
இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பள்ளிக் கல்வி அதிகாரிகளை சந்தித்து மனு அளித்துள்ளனர். இதையடுத்து,ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை கைவிட உத்தரவிட்டுள்ளனர்

7-வது ஊதியக் குழு பலன் எதிரொலி

Aug 4, 2016

  



7-வது ஊதியக் குழு பலன் எதிரொலி: அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமை வீட்டுக் கடன்- சலுகை வட்டியில் அளிக்க எஸ்பிஐ திட்டம். குழு பரிந்துரையை ஆகஸ்ட் மாதத்திலிருந்து அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாத வருமானம் உயரும் என்பதால் ஊழியர்களுக்கு வீட்டுக் கடனை சலுகை வட்டியில் அளிக்க எஸ்பிஐ திட்டமிட்டுள்ளது.
மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த பிற பணியாளர்கள் ஆகியோருக்கு நீண்ட காலஅடிப்படையில் குறைந்த வட்டியில் கடன் வழங்கமுடிவு செய்துள்ளது.ஊழியர்கள் வீட்டுக் கடனை திரும்ப செலுத்தும் காலத்தைதங்கள் வசதிக்கேற்ப நீட்டித்துக் கொள்ளலாம். அதிகபட்சம் 75 வயது வரை வீட்டுக் கடனை திரும்ப செலுத்த சலுகை அளிக்கப்படும் என வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது. வீட்டுக் கடனை திரும்ப அளிக்கும் வயது 70 வரை உள்ளது. இது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.அரசு ஊழியர்களுக்கு என ``முன்னுரிமை வீட்டுக் கடன்’’ மற்றும் ராணுவத்தினருக்கென ``சவுகரிய வீட்டுக் கடன்’’எனும் இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
   இந்த இரு சலுகை திட்டங்களில் கடன் பெறுவோர் ஏற்கெனவேஉள்ள வீட்டுக் கடன் திட்டங்களுக்கான வட்டி விகித்தைக் காட்டிலும் குறைந்த வட்டியில் கடன் பெறுவர்.ஊழியர்கள் தங்களுக்கு எந்த அளவுக்குக் கடன் கிடைக்கும் என்பதை இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு அரசுத் துறையுடன் வங்கி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த சலுகைத் திட்டத்தில் பரிசீலனைக் கட்டணம் முழுவதுமாக ரத்து செய்யப்டப்டுள்ளது.பிற வங்கிகளில் கடன் பெற்று அதை செலுத்துவோர், அந்தக்கடனை எஸ்பிஐ-க்கு இந்த சலுகைத் திட்டத்துக்கு மாற்றிக் கொள்ள முடியும் எனவும் வங்கி தெரிவித்துள்ளது.ஓய்வுக் காலத்தில் திரும்ப செலுத்தும் கடன் அளவு குறையும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
அரசின் ஊதியக் குழு பரிந் துரையால் கூடுதலாகக் கிடைக்கும் தொகையின் மூலம் வீடு வாங்கு வது மற்றும் பெரிய வீடுகளுக் குச் செல்வது போன்ற நடவடிக்கை களை ஊழியர்கள் மேற்கொள்ள லாம். அதற்கு உதவும் வகையில் எளிய தவணையில் கடன் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ தெரிவிக்கிறது.

Wednesday, 3 August 2016

ஏ.இ.இ.ஓ.,சீனியாரிட்டி பட்டியல் : 33 தலைமை ஆசிரியர்கள் நீக்கம்

ஏ.இ.இ.ஓ.,சீனியாரிட்டி பட்டியல் : 33 தலைமை ஆசிரியர்கள் நீக்கம்


சிவகங்கை: உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணிமாறுதலுக்காக தயாரிக்கப்பட்ட நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர் சீனியாரிட்டி பட்டியலில் இருந்து 33 பேரை கல்வித்துறை நீக்கியது. உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான பொதுமாறுதல் கவுன்சிலிங் நேற்று துவங்கியது. இன்று நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணி மாறுவதற்கான கவுன்சிலிங் நடக்கிறது.
 இதற்கான நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அடங்கிய சீனியாரிட்டி பட்டியலை தொடக்கக் கல்வி இயக்குனரகம் ஜூலை 1 ல் வெளியிட்டது. இதில் 31.5.09 க்குள் துறைத் தேர்வில் தேர்ச்சி அடைந்த 257 பேர் இடம் பெற்றனர்.
இந்த பட்டியலில் தகுதியான சிலரது பெயர்கள் விடப்பட்டதாக புகார் எழுந்தது.
இதையடுத்து மீண்டும் அந்தந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மூலம் புதிய பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில் 33 பேரை நீக்கி தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர்
கூறுகையில், 'கடந்த காலங்களில் கவுன்சிலிங்கில் பங்கேற்காதோர்,
ஏற்கனவே பணிமாறுதல் விரும்பாமல் கடிதம் கொடுத்தோர் பெயர்கள்
மட்டுமே நீக்கப்பட்டுள்ளன. மற்றவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்பதில் பிரச்னை இல்லை,' என்றார்.

AEEO., க்கள் இடமாற்றம்

AEEO., க்கள் இடமாற்றம்


தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங், நேற்று துவங்கியது. முதற்கட்டமாக, ஏ.இ.இ.ஓ., எனப்படும், உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கான கவுன்சிலிங் நடந்தது. இதில், 408 உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் இடமாறுதலில் பங்கேற்றனர்.
   அவர்களில், 257 பேருக்கு, அவர்களின் விருப்பப்படி இடமாறுதல் கிடைத்தது. மற்றவர்களுக்கு விருப்பத்தின்படி, அருகிலுள்ள இடங்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. சிலர் விரும்பிய இடம் கிடைக்காததால், இடமாறுதலை தவிர்த்தனர்

Tuesday, 2 August 2016

வங்கியில் 'ஸ்காலர்ஷிப்' செப்., 1 முதல் அமல்




அனைத்து மாணவர்களுக்கும், நேரடியாக கல்வி உதவித்தொகை வழங்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில அரசுகளும், அதை பின்பற்ற உள்ளன. அதற்காக, அனைத்து மாணவர்களின், 'ஆதார்' எண் மற்றும் வங்கி கணக்கு எண்ணை இணைக்க, பள்ளி, கல்லுாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து விரிவான சுற்றறிக்கை, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., ஆகியவற்றால் கல்லுாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில், 'செப்டம்பர், 1ம் தேதி முதல், மத்திய அரசின் கல்வி உதவித் தொகையை, அந்தந்த மாணவர்களே, நேரடியாக வங்கியில் தான் பெற முடியும். எனவே, உதவித்தொகை பெறும் அனைத்து மாணவர்களின் ஆதார் எண்ணை பெற்று, அதை வங்கி கணக்கில் இணைக்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் இன்று துவக்கம்




தொடக்க பள்ளிகளில், மூன்று லட்சம் ஆசிரியர் பணியிடங்களுக்கான, விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், இன்று துவங்குகிறது. முதல் நாளான இன்று, உதவி தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு இடமாறுதல் வழங்கப்படுகிறது. நாளை, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, உதவி தொடக்க கல்வி அதிகாரிகளாக இடமாறுதல் வழங்கப்படுகிறது.

இதையடுத்து, 6ம் தேதி, பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவல், பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு நடக்க உள்ளது. இதில் தான், ஒவ்வொரு ஆண்டும் உள்ளடி வேலைகள் அதிகமாகி, ஆங்காங்கே முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இதேபோல, இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கிலும், தில்லுமுல்லு வேலைகள் நடப்பதாக, கடந்த ஆண்டுகளில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 'இந்த ஆண்டு, காலி இடங்களை மறைத்து, அதில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மறைமுகமாக இடமாறுதல் வழங்கக் கூடாது' என,ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இன்று குரு பெயர்ச்சி: பரிகாரம் செய்வது யார்




நவக்கிரகங்களில் சுபகிரமான குருபகவான் சிம்மராசியில் இருந்து கன்னி ராசிக்கு இன்று காலை 9.23மணிக்கு பெயர்ச்சியாகிறார். இதையொட்டி பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் வருமாறு.




திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி, தஞ்சாவூர் அருகிலுள்ள தென்குடித்திட்டை, மதுரை அருகிலுள்ள குருவித்துறை, சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் குரு கோவில், திருச்சி அருகிலுள்ள உத்தமர்கோவில், சென்னை பாடி வலிதாயநாதர், காஞ்சிபுரம் அருகிலுள்ள கோவிந்தவாடி அகரம் குரு கோவில்உள்ளிட்ட குருதலங்களிலும், சிவாலயங்களிலுள்ள தட்சிணாமூர்த்தி சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடக்கிறது.


ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசியினருக்கு நற்பலன் நடக்கும். மேஷம், கடகம், துலாம், தனுசு ஆகிய ராசியினருக்குசுமாரான பலனும், மிதுனம், கன்னி, கும்பம் ஆகிய ராசியினருக்கு மிக சுமாரான பலனும் நடக்கும் என்பதால் இவர்கள் குரு கோவில்களில் பூஜை செய்து கொள்ள வேண்டும்.கன்னி ராசியில் ஒரு ஆண்டு தங்கும் குருபகவான் 2017 செப்., 2ல் துலாம் ராசிக்கு செல்வார். குருபெயர்ச்சி முடிந்த பிறகும் பரிகார பூஜைகளை தொடர்ந்து செய்ய முக்கிய குரு தலங்களில்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.