Thursday, 7 July 2016

வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தினால் ரூ. 10,000 அபராதம்!

வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தினால் ரூ. 10,000 அபராதம்!


சென்னை;வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று கிண்டி பொறியியல் கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.மாணவர்களுக்கு செல்போன், உடை கட்டுப்பாடு போன்றவற்றை பள்ளி, கல்லுாரிகள் விதித்து வருகின்றன. இருப்பினும் அவை மாணவர்களால் கடைபிடிக்கப்படுவதில்லை.
   சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கிவரும் கிண்டி பொறியியல் கல்லூரி, செல்போன் உள்ளிட்ட விஷயங்களில் மாணவர்களிடையே ஒழுங்குமுறையை கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.அதன் ஒருகட்டமாக மாணவர்கள் வகுப்பறைக்கு செல்போன் கொண்டுவந்தால் அவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த கல்லூரியின் நிர்வாகம் மாணவ-மாணவிகளுக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பிய சுற்றறிக்கையில், 'கிண்டி பொறியியல் கல்லூரியில் வாகனங்கள் நிறுத்தஉத்தரவிட்டுள்ள இடத்திற்கு மாறாக இருசக்கர வாகனங்களை நிறுத்தினால் ரூ.2 ஆயிரம் அபராதமும், கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களை நிறுத்தினால் ரூ.6 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.
  இருசக்கர வாகனத்தை வளாகத்தில் ஓட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதமும், கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களை ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடினால் அல்லது பட்டாசு வெடித்தால் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை செலுத்தவேண்டும். கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாணவர்களோ அல்லது மாணவிகளோ ராகிங் செய்தால் அவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் அல்லது 2 வருடம் ஜெயில் தண்டனை விதிக்கப்படும் அல்லது அந்த மாணவர் அல்லது மாணவி கல்லூரியில் இருந்து நீக்கப்படுவார்.
மேலும் மாணவர் அல்லது மாணவி வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தினால் பயன்படுத்தியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அடையாள அட்டை அணியாமல் வந்தால் அவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் உண்டு' இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment