Monday, 25 July 2016

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கட்டணம்; திருப்பி வழங்க உத்தரவு


அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்விக்கு என, வசூல் செய்யப்பட்ட கட்டணத்தை, மாணவர்களுக்கே திருப்பி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி பிரிவும் நடத்தப்பட்டு வருகிறது.


சேலம் மாவட்டத்தில், 100க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி வழங்கப்படுகிறது. இதில், தமிழ் வழிக்கல்வி மாணவர்களிடம், கல்விக்கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் உள்ளிட்டவை வசூல் செய்யப்படுவதில்லை.




ஆனால், நடப்பு கல்வியாண்டில், ஆங்கில வழிக்கல்வி படிக்கும் ஆறு முதல், பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியரிடம், தலா, 200 ரூபாய் வரை, கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், ஆங்கில வழிக்கல்விக்கென வசூல் செய்யப்பட்ட கட்டணத்தை, மாணவர்களுக்கே திருப்பி வழங்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி உத்தரவிட்டுள்ளார்.



இதுகுறித்து, அவர் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரையிலான ஆங்கில வழிக்கல்விக்கான கட்டணத்தையும், அரசே திரும்ப செலுத்துவதால், அவர்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டியதில்லை. ஆனால், தணிக்கையின் போது ஏற்பட்ட கருத்து மாறுபாட்டால், நடப்பு கல்வியாண்டில் ஆங்கில வழிக்கல்விக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது.



இதற்கான அரசாணை மற்றும் தெளிவுரை கிடைத்த நிலையில், மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட ஆங்கில வழிக்கல்விக்கான கட்டணத்தை, திரும்ப மாணவர்களிடமே வழங்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment